
எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவை அடுத்து பயிற்றப்பட்ட இராணுவ அதிகாரிகள் சகிதம் அனுப்பி வைக்கப்பட்ட இராணுவத்தினர் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கொலன்னாவ, முதுராஜவெல, அநுராதபுரம் உட்பட நாட்டிலுள்ள உப எரிபொருள் விநியோக நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
ஒரே நேரத்தில் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பாதுகாப்பு படையினர் முதற்கட்டமாக நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதுடன் வேலை நிறுத்தத்தில் போராட்டத்தை பகிஷ்கரித்து வழக்கம் போல் சேவையில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்கியுள்ளனர்.
படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த போதிலும் கொலன்னாவையிலுள்ள 2 நுழைவாயில்களையும் முதுராஜவெலயிலுள்ள 3 நுழைவாயில்களையும் பவுசர்களை பயன்படுத்தி வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அத்துடன் வழிமறித்த பவுசர்களின் டயர்களிலிருந்து காற்றை திறந்து விட்டு படையினரின் செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில் இடையூறுகளை ஏற்படுத்தினர்.
இராணுவத் தளபதியின் ஆலோசனைக்கமைய, மேற்கு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் வழிகாட்டலில் இராணுவத்தின் 14வது படைப்பிரிவனர் மற்றும் பயிற்றப்பட்ட படைவீரர்கள் அந்த இடையூறுகளையும் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து நீக்கிய பாதுகாப்பு படையினர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
நேற்று காலை தொடக்கம் பவுசர்களை பழுதுபார்த்த படையினர் பெற்றோலிய நிலையத்திற்குள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுப்பட்டிருந்த பவுசர்களில் எரிபொருளை நிரப்பப்பட்டதுடன் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் முதலாவதாக ஒரே தடவையில் 15 பவுசர்கள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டன. ஓவ்வொரு பவுசர்களுக்கும் தலா 2 படைவீரர் என்ற அடிப்படையில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படுத்தப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, விமானங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் நிரப்பப்பட்ட ரயிலும் நேற்று பிற்கல் அனுப்பி வைக்கப்பட்டது. எரிபொருள் நிறப்பிய நிலையில் ஏற்றிச் சென்ற ரயிலை கொலன்னாவ பெற்றோலிய நிலையத்திலிருந்து வெளிக்கு வந்ததும் அந்த ரயிலை வழிமறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு இடையூறு ஏற்படுத்த முற்பட்டனர். இதன் போது அந்த பிரதேசத்தில் சிறிய பதற்ற நிலைமை ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் மூலம் இடையூறு ஏற்படுத்திய 16 ஆர்ப்பாட்டக்கார்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, அத்தியாவசிய சேவை நடவடிக்கைகளை வழங்க தாங்கள் தயார் என ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று மாலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போது இணக்கம் தெரிவித்து சேவைக்கு திரும்பியதை அடுத்து அத்தியாவசிய மற்றும் விஷேட கடமையில் ஈடுப்படுத்தப்பட்ட இராணுவம் உட்பட பாதுகாப்பு படையில் நேற்று பிற்பகல் 3.00 மணி தொடக்கம் கொலன்னாவ, முத்துராஜவெல உள்ளிட்ட அனைத்த எரிபொருள் களஞ்சிய மற்றும் விநியோக நிலையங்களிலிருந்து வாபஸ் பெறப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். வழக்கமான பாதுகாப்பு கடமையில் ஈடுப்படும் இராணுவத்தினர் மாத்திரம் தொடர்ந்தும் சேவையில் ஈடுப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஸாதிக் ஷிஹான்
------------------
வேலைக்கு திரும்பாதோர் பதவி இழப்பர்; அரசாங்கம் அவசர அறிவிப்பு
பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அசௌகரியங்களை கவனத்திற் கொண்டு உடனடியாக சேவைக்கு திரும்புமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சில கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் நேற்று முன்தினம்(25) முதல் ஆரம்பித்திருக்கும் பணி பகிஷ்கரிப்பால் ல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரச்சினைகள் ஏற்படுமானால் பேச்சுவார்த்தையின் மூலம் அவற்றை தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பங்ளை வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்றவகையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை கவனத்தில் கொண்டு அத்தியாவசிய சேவை சட்டத்திற்கேற்ப எரிபொருள் களஞ்சியப்படுத்தல், போக்குவரத்து மற்றும் விநியோகம் நேற்று இரவு முதல் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சேவைக்கு திரும்பாதவர்கள் சேவையை விட்டுச் சென்றவர்களாக கருதப்படுவர் என்றும் அரசாங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.