சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில், சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றைய தினம் மன்னாரில் பல கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆட்சி ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே அராஜகம் தலைதூக்கியுள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, தான் புத்தளம் கனமூலைப் பகுதிக்கு மக்களை சந்திக்க சென்றிருந்த சந்தர்ப்பத்தில், தனது வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் இதனைப் புலப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறுகிய காலத்தில், சிலர் அமைச்சுப்பதவிகளை எடுத்துக் கொண்டு வருவார்கள் எனவும், இதனைக் கண்டு ஏமாற வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுள்ளார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு பலமான சக்தியொன்றை உருவாக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.