Monday, December 11, 2017

சா/த பரீட்சை கருதி பணி புறக்கணிப்பை கைவிடவும்

கல்வி அமைச்சின் கோரிக்கையும் நிராகரிப்பு

க.பொ.த. சாதாரண தர பரீட்சை கருதி பணிப் புறக்கணிப்பை கைவிடுமாறு, கல்வியமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கையையும், புகையிரத தொழிற்சங்கம் நிராகரித்துள்ளத.

புகையிரத என்ஜின் சாரதி உதவியாளர்களை பணிக்கு அமர்த்துவதில், உரிய விதிமுறைகள் பேணப்படவில்லை என தெரிவித்து, கடந்த புதன்கிழமை நள்ளிரவு (07) முதல் புகையிரத ஊழியர்கள் 05 ஆவது நாளாக மேற்கொண்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை நாளைய தினம் (12) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையைகருத்திற்கொண்டு, குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசமினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை, புகையிரத தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது.

எனவே, பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், நேர காலத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு வருவதற்கு உதவுமாறு பெற்றோர்களிடம் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்களின் அசெளகரியத்தை தவிர்க்கும் வகையில் புகையிரத சேவை அத்தியவசியமாக்கும் வர்த்தமானி அறிவித்தல், சேவைக்கு திரும்பாதோர் பணியிலிருந்து நீங்கியதாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை, ஓய்வு பெற்ற ஊழியர்களை பணிக்கு அழைப்பு விடுத்தமை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

ஆயினும் குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், புகையிரத தொழிற்சங்கம், பணிப் புறக்கணிப்பை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் புகையிரத தொழிற்சங்கங்களுடன் தற்போது கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும், அனைத்து புகையிரத என்ஜின் சாரதிகள், பாதுகாப்பாளர்கள், நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். விதானகே உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் புகையிரத சேவை அத்தியவசியமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (12) கடமைக்கு திரும்பாத ஊழியர்கள், சேவையிலிருந்து விலகியவர்களாக கருதி, புகையிரத திணைக்களத்தால் அவர்களுக்கான கடிதங்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜி.எஸ். விதானகே தெரிவித்தார்.

தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், இன்று (12) காலை 10.00 மணி வரை, 10 புகையிரத சேவைகள் இடம்பெற்றதாக புகையிரத பொது முகாமையாளர் எஸ்.எம் அபேவிக்ரம தெரிவித்தார்.

இதேவேளை, தபால் புகையிரத சேவைகள் இடம்பெறாததன் காரணமாக தபால் விநியோக நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் திணைக்களத்திற்கு சொந்தமான லொறிகளை பயன்படுத்தி, பொதிகள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தபாலதிபர் ரோஹண அபேரத்ன் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற புகையிரத ஊழியர்களுக்கு அழைப்பு



ஓய்வு பெற்ற புகையிரத ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பை கருத்திற் கொண்டு, புகையிரத சேவை அத்தியவசியமாக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் அசௌகரியத்தை குறைக்கும் வகையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், புகையிரத என்ஜின் சாரதிகள், பாதுகாப்பாளர்கள், நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்களை தங்களுக்கு அருகிலுள்ள புகையிரத நிலையத்தில் வரவை உறுதிப்படுத்துமாறு, விருப்பமுள்ள ஓய்வு பெற்ற புகையிரத ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Image result for ரயில்
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured