
இன்று (08) பிற்பகல் யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் திருட முற்பட்டபோதே இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த சில மாதங்களாக யாழ்.நகரிலுள்ள நகைக்கடைகளுக்குச் சென்று நகைகளைக் கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்வார். எனினும், நகைகள் எவற்றையும் கொள்வனவு செய்ய மாட்டார். அவர் அங்கிருந்து சென்ற பின் அவர் பார்வையிட்ட நகைகளிலொன்று காணாமல் போயிருக்கும். இது வழமையானதொன்றாகவிருந்து வந்தது.
இந்த நிலையில் திருட்டுப் போன நகைக்கடை உரிமையாளர்கள் உஷாரடைந்தனர். இது தொடர்பில் ஏனைய நகைக்கடைக்காரர்களுக்குக் குறித்த பெண்ணின் புகைப்படத்துடன் தகவல் பரிமாறி அவர்களை விழிப்படையச் செய்தனர். இந் நிலையில் குறிப்பிட்ட பெண்மணி நேற்று முன்தினம் பிற்பகல் யாழ்.கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் வழமை போன்று மீண்டும் தனது கைவரிசையைக் காட்ட முற்பட்டுள்ளார். இதனையடுத்து மேற்படி நகைக்கடையில் வேலை செய்பவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட குறித்த பெண் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸார் குறித்த பெண்ணிடம் திருட்டுப் போன ஏனைய நகைகளை மீட்பதற்காகப் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.