Sunday, October 27, 2019

விஜித ஹேரத்தின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது



ஜனாதிபதியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக தனிப்பட்ட பாவனைக்கு 800 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதும் எவ்வித அடிப்படையும் அற்றதாகும் என்றும் அதனை கடுமையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஜனாதிபதிக்காக மேலும் 240 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டதாக ஊடக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பதவி வகித்த அல்லது பதவி வகிக்கும் எந்தவொரு ஜனாதிபதிக்கும் தனிப்பட்ட பாவனைக்காக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும் அந்த நிதி தமது அலுவலகத்திற்கே ஒதுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் செலவுத் தலைப்பில் பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி விசேட செயலணிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சித்திட்டங்களுக்கேயாகும்.

அந்த வகையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட பாவனைக்கு எந்தவகையிலும் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் இத்தகைய விசமத்தனமான குற்றச்சாட்டுக்களை முற்றிலும் நிராகிப்பதாகவும் ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured