பிரிட்டனில் லொறி ஒன்றிலிருந்து கடந்த புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எசெக்ஸ் பகுதியில் குளிரூட்டப்பட்ட லொறி கண்டெய்னரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனாவிலிருந்து வந்தவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் 8 பெண்களும் அடங்குவர்.
அந்த கண்டெய்னருக்குள் உறைநிலைக்கும் 25 டிகிரி குறைவான வெப்பநிலை இருந்திருக்கக் கூடும் என்பதால், அந்தக் குளிரில் உறைந்து 39 பேரும் உயிரிழந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள லொறி ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டனையடுத்த எசெக்ஸ் பகுதியிலிருந்த லொறியில் 39 சடலங்கள் இருப்பதை அவசரகால ஊர்தி பணியாளர்கள் கண்டறிந்து, பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சடலங்கள் இருந்த லொறி பல்கேரியாவிலிருந்து பிரிட்டனுக்கு சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயது லொறி ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.