Friday, April 6, 2018

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் இணைப்புச்செயலாளர் மின்ஹாஜ், அமைச்சர் P.ஹெரிசனின் தம்பியினால் சராமாரியாக தாக்கப்பட்டார்.


அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் இணைப்புச்செயலாளர் மின்ஹாஜ் அவர்கள் மகவிலச்சிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எத்தத்கல விகாரையின் பிக்குவின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பிரதேசத்தில் வாழும் மக்களின் குடி நீர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்றை குறித்த விகாரையில் நேற்று அப்பிரதேச மக்களுடன் நடத்தினார்.

கலந்துரையாடலின் முடிவில் அடுத்த தினத்தன்று (2018.04.06) ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் செலவில் தண்ணீர் பவுசர் ஒன்றை அந்த பிரதேசத்திற்கு அனுப்பி குடி நீர் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் மக்கள் அனைவருக்கும் இலவசமாக குடி நீர் வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.

கலந்துரையாடல் முடிந்ததும் அவ்விடத்திற்கு 7  நபர்களுடன் கார் ரக வாகனம் ஒன்றில் வந்திறங்கிய அமைச்சர் P.ஹெரிசனின் செயலாளரும், உடன் பிறந்த சகோதரருமாகிய P.நியுட்டன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் இணைப்புச் செயலாளர் மின்ஹாஜினை நோக்கி “நீ தான் இஷாக் ரஹுமானின் செயலாளரா? முஸ்லிம்களின் உதவி எங்கள் ஊர்களுக்கு தேவையில்லை, உன்னை யார் இங்கே அனுமதித்தது” என்றெல்லாம் இனவாதமாக பேசி தாக்க முனைந்துள்ளார்.

அதை தடுக்க முயன்ற பெளத்த பிக்குவையும் தாக்க முயன்று பின்னர் தவறான வார்த்தை பிரயோகங்கள் மூலம் பிக்குவை அசிங்கப்படுத்திவிட்டு கார் ரக வாகனத்தில் வந்த நபர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் இணைப்புச் செயலாளர் மின்ஹாஜினை சராமாரியாக தாக்கியுள்ளனர். தற்பொழுது அவர் அனுராதபுரம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வலது கை விரல் ஒன்றில் சத்திர சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் இணைப்புச் செயலாளர் மின்ஹாஜிடம் கேள்வி எழுப்பையில்,

இன, மத, கட்சி பேதமின்றி அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அனுராதபுர மாவட்டம் முழுவதும் வாழுகின்ற மக்களுக்கு தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றார். அனுராதபுர மாவட்டத்தில் காணப்படும் சிறிய கிராமங்களுக்கு என்னை அனுப்பி ஒவ்வொரு கிராமங்களினதும் குறைகளை கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வினை இன, மத கட்சி பேதமின்றி பெற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டிருந்தார். அதனடிப்படையிலேயே ஒவ்வொரு ஊராக சென்று நாங்கள் எங்கள் சேவையை தொடர்கிறோம்.

அந்தவகையில் கடந்த 2 ஆம் திகதி மகவிலச்சிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எத்தத்கல விகாரையின் பிக்கு என்னை தொடர்பு கொண்டு அவரது விகாரையை அண்மித்த யாய 3, யாய 7 ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் குடி நீருக்கு கடும் சிரமப்படுவதாகவும், அவற்றை நேரில் வந்து பார்த்து அவற்றுக்கான தீர்வினை பெற்றுத்தரும் படியும் வேண்டிக்கொண்டார்.

அதனடிப்படையில் நேற்று 5.4.2018 அன்று குறித்த பிக்குவின் ஏற்பாட்டின் கீழ் அவரது விகாரையில் குடி நீர் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் மக்களை ஒன்று சேர்த்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு அவற்றுக்கான தீர்வினையும் பெற்றுக்கொடுத்தோம்.

குறித்த கலந்துரையாடல் நிறைவடைந்ததும் அவ்விடத்திற்கு 7 பேருடன் வந்த அமைச்சர் P.ஹெரிசனின் தம்பி P.நியுட்டனும் அவரது கூட்டாளிகளும் எனக்கும், விகாரையின் சாதுவுக்கும் தீய வார்த்தை பிரயோகங்கள் மூலம் தவறாகவும், இனவாதமாகவும் பேசிவிட்டு என்னை கடுமையாக தாக்கினார்கள்.

இதனை தொடர்ந்து நான் மகவிலச்சிய போலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துவிட்டு வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வருகின்றேன். 

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தொடர்ச்சியான சேவைகள் மூலம் கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களின் நல்லபிமானத்தை பெற்று வருகின்றார். இதனால் தமது அரசியல் அங்கீகாரம் முகவரி இல்லாமல் அழிந்து போய் விடுமோ என்று பயந்து இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடும் அரசியல் சாயம் பூசிய இனவாதிகளின் செயல்பாடுகளால் எங்கள் மக்கள் சேவையை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்தார்.

ஐ.எம்.மிதுன் கான்






Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured