விமான பராமரிப்பு பொறியியலாளர் பகுதிக்கு காலாவதியான உபகரணங்களை கொள்வனவு செய்தமையினால் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு 2017 ஆம் ஆண்டில் 27.2 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர் சங்கம், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) முறைப்பாடொன்றை முன்வைத்தது.
குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை அண்மையில் பாராளுமன்றத்தில் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களை சந்தித்து எழுத்துமூலமாக கையளித்தனர்.
நிறுவனம் பாரிய நட்டத்துக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் உயர்மட்ட நிர்வாகத்துக்கு இதுவரை நிறுவனத்தில் காணப்படாத புதிய பதவிகளை உருவாக்க நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்கள் அந்த முறைப்பாட்டில் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நியமனம் காரணமாக நிறுவனத்தின் நட்டமடையும் நிலைமை மேலும் அதிகரித்துள்ளதாக அவர்கள் இந்த முறைப்பாட்டின் மூலம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிர்வாகம் ஒரு சில தொழிற்சங்கங்கள் தொடர்பில் பக்கசார்பான கொள்கையை பின்பற்றி தொழிற்சங்க கட்டளை சட்டத்தையும் மீறி செயற்படுவதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர் சங்கம் கோப் குழுவுக்கு வழங்கியுள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நிர்வாகத்தின் முறையற்ற தீர்மானம் காரணமாக ஸ்ரீ லங்கன் விமான சேவையின் கொழுப்பில் இருந்த காரியாலயத்தை கட்டுநாயக்கவுக்கு மாற்ற ஏற்பட்டதாகவும், பின்னர் மீண்டும் அதனை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும், இதனால் நிறுவனத்துக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரச சார்புத்துறை நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் கோப் குழுவுக்கு முறைப்பாடுகள் போன்று குறைகளையும் முன்வைக்கும் சந்தர்ப்பம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு சுற்றுலா துறை பிரதிநிதிகள் சிலர் அவர்கள் முகங்கொடுக்கும் சிக்கல்கள் தொடர்பில் கோப் குழுவுக்கு எழுத்து மூலம் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.