Monday, October 28, 2019

பல மணிநேர போராட்டத்திற்கு பின் சிறுவன் சுஜித் சடலமாக மீட்பு



திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிறுவனை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

சுஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் போது சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

மேலும் ஆழ்துளை கிணறு அருகே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினர், மற்றும் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருவது அந்த இடத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் குழிக்குள் இருந்து இரவு 10.30 மணியளவில் இருந்து சிறுவன் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் குழந்தை சுர்ஜித் உயிரிழந்து விட்டதாகவும், குழந்தையின் உடல் மீட்பது குறித்து மீட்புபடையினரின் தகவல் குறித்து அடுத்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு, மீட்பு படையினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மணப்பாறை அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் சிறுவன் சுஜித் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் சிறுவன் சுஜித் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிறுவன் சுஜித் மீட்கப்பட்டு வந்த 80 மணிநேர போராட்டம் தோல்வியில் முடிந்தது அனைத்து தரப்பு மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured