நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில், அந்தக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளதோடு, அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்மொழிவாக சமர்ப்பிக்கவுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றமொன்றின் இயங்குகாலம் 5 ஆண்டுகளென, நாட்டின் அரசியலமைப்பு வரையறை செய்துள்ள நிலையில், தற்போதைய நாடாளுமன்றத்தின் இயங்குகாலம் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முடிவடைகின்றது.
இதேவேளை, நாடாளுமன்றமொன்று தனது இயங்கு காலத்தில் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்த பின்னர், அதனைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
எவ்வாறெனினும், குறித்த நான்கரை ஆண்டுகாலப் பகுதிக்கு முன்னதாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமாயின், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் சம்மதம் பெறப்பட வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, நாடாளுமன்றில் அதிகளவு உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.