முன்னாள் அமைச்சர் விஸ்வ வர்ணபாலவின் கோரிக்கையை ஏற்றே சைட்டம் நிறுவனத்தை நான் நிறுவினேன். எனவே இது இலாப நோக்கத்தில் உருவாக்கப்பட்ட கற்கை நிறுவனம் அல்லவென சைட்டம் நிறுவனத்தின் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்தார். நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையை அரச உடமையாக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலாபமீட்ட வேண்டும் என்ற நோக்கத்தினால் மாத்திரம் நாம் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சராகவிருந்த விஸ்வ வர்ணபால விடுத்த கோரிக்கையின் நிமித்தமே இந்த தனியார் வைத்திய கல்லூரியை ஆரம்பித்தேன்.
18 ஆயிரம் பேர் மாத்திரமே பல்கலைக்கழக அனுமதியை பெறுகின்றார்கள். ஏனைய மாணவர்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுக்க பணம் இருக்கின்றவர்கள் உதவுங்கள் என்றார். அந்த நேரத்தில் என்னிடத்தில் பணம் இருந்தது. எனவே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரியை நிறுவினேன்.
மூன்று ஏ சித்திகளை பெற்ற மாணவர்களும் கூட இன்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் இருக்கின்றனர். எனவே அவர்களுக்கான களமாகவே சைட்டம் கற்கை நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை அமைப்பதற்கு அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உள்ளிட்டோர் பெரிதும் உதவினார்கள்.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கி அவற்றை மேம்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். தற்போது வரையில் சைட்டம் நிறுவனத்தினால் 400 பொறியியலாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறிருக்கின்ற போது இந்த நிறுவனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற வேலை நிறுத்தத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலேயே இதனை அரசாங்கத்திற்கு கையளிக்கின்றேன்.
இந்த நிறுவனத்தை அமைப்பதற்கு எந்த ஒரு நிறுவனமும் எனக்கு கடன் வழங்கவில்லை. பின்னர் நான் நண்பர் ஒருவரின் உதவியுடன் இலங்கை வங்கியில் கடன் பெற்று நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையினையும் நிறுவினேன்.
35 ஆயிரத்து 550 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்ட இந்த வைத்தியசாலையை வருகின்ற காலத்திலும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றார்.
