Thursday, September 14, 2017

சைற்றம் எதிர்ப்பு: வாகன பேரணி இன்று கொழும்பு வந்தடையும்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி நான்கு நாட்களுக்கு முன்னர் நாட்டின் பல பகுதிகளில் ஆரம்பமான வாகனப் பேரணி இன்று கொழும்பை வந்தடைகிறது. யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 2000 ற்கும் அதிகமான வாகனங்கள் இன்று கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனப் பேரணி கொழும்பை வந்தடைவதால் பாரிய வாகன நெருக்கடி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய தேவை தவிர்ந்தவர்கள் கொழும்புக்கு வருவதைத் தவிர்க்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
சைற்றத்துக்கு எதிராக நடத்தும் வாகனப் பேரணியைத் தொடர்ந்தும் அரசாங்கம் உரிய தீர்வொன்றை வழங்காவிட்டால் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டமொன்றுக்குச் செல்லப்போவதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று முடிவடையவிருக்கும் வாகனப் பேரணிக்கு ஆதரவாக மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அரசாங்க வைத்தியசாலைகளில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படவிருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் சரித்த அளுத்கே தெரிவித்தார். அரசாங்க மருத்துவ சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சைற்றம் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி இறுதித் தீர்வொன்றை தருவார் என எதிர்பார்த்திருந்தபோதும் இதுவரை தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை. இது பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் உறுப்பினர் அல்லாதவர்களும் கலந்துகொள்கின்றனர். இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குறித்த குழுவின் அறிக்கை திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டபோதும் அதிலுள்ள விடயங்கள் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அது மாத்திரமன்றி மருத்துவ சபையின் கௌரவத்தைக் குறைக்கும் வகையில் சூட்சுமமாக சில காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சைற்றம் மருத்துவ கல்லூரிக்கு எப்படி சட்டரீதியான அங்கீகாரம் அளிப்பது என்பது பற்றியே நிர்வாகிகளும், அதிகாரிகளும் சிந்தித்து வருவதாக டொக்டர் அளுத்கே குற்றஞ்சாட்டினார்.
"கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆரம்பமான வாகனப் பேரணிகள் நாளை (இன்று) கொழும்பை வந்தடையவுள்ளன.
இதில் சுமார் 2000ற்கும் அதிகமான வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கின்றோம். இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க அத்தியாவசிய தேவையை தவிர வேறு எந்தத் தேவைகளுக்கும் கொழும்புக்கு வரவேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கிறோம்" என்றார்.
இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு நிர்வாகிகளும், அதிகாரிகளுமே பொறுப்புக் கூறவேண்டும் என டொக்டர் சரித்த அளுத்கே கூறினார். இப்பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள அரசாங்க மருத்துவசாலைகளில் நாளை (இன்று) காலை 8 மணிமுதல் 24 மணித்தியாலங்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். கடந்த நான்கு நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருந்தபோதும், அவசர சேவைகள் மற்றும் டெங்குக்கான மருத்துவ சேவைகள் எந்தவித தடையும் இன்றி முன்னெடுக்கப்படும்.
இந்தப் பேரணிக்கும் அரசாங்கம் உரிய பதிலை வழங்காவிட்டால் சுகாதாரத்துறையினர் மற்றும் கல்வித் துறையிலுள்ள தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு எதிர்வரும் 21 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் எச்சரிக்கைவிடுத்தார்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured