பிணை முறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2008 முதல் 2014 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி தொடர்பான பாரிய மோசடிகள் குறித்து அரசாங்கம் ஆராய இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
2008 தொடக்கம் 2014 வரை 5147 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில் 4702 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறிகள் தனிப்பட்ட நேரடி வழங்கல் முறைமையிலே விநியோகிக்கப்பட்டுள்ளதோடு இதில் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் பிரமிட் முறை மோசடிக்கு சமமான மோசடி 2015 ற்கு முன்னர் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பிணை முறி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர், ராஜபக்ஷ ஆட்சியில் இவ்வாறான விசாரணை நடந்திருந்தால் லசந்த விக்ரமதுங்க சென்ற வழியில் தான் செல்ல நேரிட்டிருக்கும் எனவும் கூறினார்.
இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள திறைசேரி பிணைமுறிகளுக்காக 2017 ஆம் ஆண்டு முதல் 2045 ஆம் ஆண்டு வரை வட்டியுடன் சேர்த்து 7222 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
பிணைமுறி தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிவிப்பின் பிரகாரம் நான் ஆணைக்குழுவில் தேவையான விளக்கம் வழங்கினேன்.
ஆணைக்குழுவின் சாட்சி விசாரணையின் போது வெளிவந்திராத பல விடயங்கள் தொடர்பில் ஆணைக்குழு முன்னிலையில் நான் விளக்கங்கமளித்தேன். 2015 ஆம் ஆண்டு நாம் ஆட்சியை பொறுப்பேற்கும் போது நாட்டில் காணப்பட்ட நிதி நிலைமை குறித்து நான் விளக்கினேன்.
2014 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வெளிநாட்டு கடனாக 3113 பில்லியன் ரூபா காணப்பட்டது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 30 வீதமாகும். 2014 ஆம் ஆண்டில் காணப்பட்ட மொத்த கடன் தொகையானது மொத்த தேசிய உற்பத்தியில் 71.3 வீதமாகும். நாட்டின் பொருளாதார நிலைமையின் படி அரசின் வருமானம் கடன் செலுத்துவதற்கு போதுமானதாக இருக்கவில்லை. அரசின் செலவுகளை அடைக்க மேலும் கடன் பெற நேரிட்டது.
2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான பிணைமுறி விவகாரம் குறித்த தகவல்கள் மத்தியவங்கியில் இருந்து பெற்றேன். தனிப்பட்ட நேரடி வழங்கலாகவே இவை வழங்கப்பட்டுள்ளன. எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி இவை வழங்கப்பட்டன.
2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை 5147 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில் 4702 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறிகள் தனிப்பட்ட நேரடி வழங்கல் முறைமையிலே விநியோகிக்கப்பட்டுள்ளன. 84 தடவைகள் தனிப்பட்ட நேரடி வழங்கல் முறைமையின் ஊடாக பிணைமுறிகள் வழங்கப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டில் 4 சந்தர்ப்பங்களில் மட்டுமே தனிப்பட்ட நேரடி வழங்கல் முறைமையின் கீழ் பிணைமுறிகள் வழங்கப்பட்டுள்ளன. 157.5 பில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறியே இவ்வாறு வழங்கப்பட்டன.
இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள திறைசேரி பிணைமுறிகளுக்காக 2017 ஆம் ஆண்டு முதல் 2045 ஆம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய மொத்த தொகை மற்றும் வட்டி தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை மத்திய வங்கியூடாக பெற்றேன். 2045 ஆம் ஆண்டு வரை பிணைமுறிகளுக்காக 4154 பில்லியன் ரூபா செலுத்த வேண்டும்.இது தவிர வட்டியாக 3068 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. இக்காலத்தினுள் பிணைமுறி ஊடாக அரசாங்கத்துக்கு மேலும் கடன்களை பெற வேண்டி ஏற்படலாம். அந்த தொகையையும் இணைத்தால் பாரிய கடன் தொகையொன்றை எதிர்காலத்தில் செலுத்த வேண்டி ஏற்படும்.
தனிப்பட்ட நேரடி வழங்கல் முறைமையின் கீழ் பிணைமுறி விநியோகிப்பதற்கு நாணயச் சபையின் அனுமதி பெறப்படவில்லை.
நாணயச் சபையின் அனுமதி இன்றி, வெளிப்படைத்தன்மை இல்லாமல் தமக்கு தேவையான வகையில் வட்டி வீதங்களை தீர்மானித்து தமக்கு தேவையான முதன்மை வர்த்தகர்களுக்கு வழங்கும் முறைமையொன்றே முன்பு இருந்தது.
2015 ஆம் ஆண்டு நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் வரை பிரமிட் மோசடிக்கு சமமான முறையே காணப்பட்டது. கடந்த காலத்தில் பெற்ற கடன் மற்றும் வட்டியை திரும்பிச் செலுத்துவதற்காக எமது பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும்.
பிணைமுறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நிறைவடைந்துள்ளது.அதன் பின்னர் 2008 – 2014 காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி தொடர்பான பாரிய மோசடிகள் குறித்து ஆராய இருக்கிறோம்.
