அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்லாமிய எதிர்ப்பு வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டிருப்பது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. “ஜனாதிபதி இவ்வாறு செயற்படுவது தவறானது” என்று பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் நாட்டு தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான ஜெய்டா பிரன்சன் என்ற பெண் பதிவிட்ட மூன்று வீடியோக்களையே டிரம்ப் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரான்சன் அச்சுறுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தியது அல்லது நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவராவார்.
இவரது வீடியோவை பகிர்ந்து கொண்டது குறித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் டிரம்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. எனினும் இதனை விமர்சித்த பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயை, பிரிட்டனில் பயங்கரவாதத்தின் மீது கவனம் செலுத்தும்படி டிரம்ப் அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “என் மீது கவனம் செலுத்த வேண்டாம், பிரிட்டனுக்குள் நிகழ்ந்துவரும் அழிவுகரமான தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்ப் பகிர்ந்துகொண்டிருக்கும் முதல் வீடியோவில், புலம்பெயர் முஸ்லிம் ஒருவர் நெதர்லாந்து இளைஞர் ஒருவரை தாக்குவதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் புலம்பெயர் ஒருவரல்ல என்றும் நெதர்லாந்தில் பிறந்து வளர்ந்தவர் என்றும் அந்நாட்டு அரச வழக்கறிஞர் சேவை விளக்கியுள்ளது.
பகிரப்பட்ட இரண்டாவது வீடியோவில் நபர் ஒருவர் கன்னி மரியா சிலை ஒன்றை தகர்ப்பதை காணமுடிகிறது. 2013 ஆம் ஆண்டு பதிவேற்றப்பட்டிருக்கும் இந்த வீடியோவில் தோன்றும் நபர் “லெவான்ட் பூமியில் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வழிபடக் கூடாது” என குறிப்பிடுகிறார். இது சிரியாவில் இருந்து எடுக்கப்பட்டது என நம்பப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு எகிப்து கலவரத்தின்போது பதிவான வீடியோ ஒன்றையும் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அதில் அலக்சான்ட்ரியாவில் மாடிக் கட்டடத்திற்கு மேல் இருந்து ஒருவர் தூக்கி எறியப்படுகிறார். இதில் தொடர்புபட்டவர்கள் 2015 ஆம் ஆண்டில் தண்டிக்கப்பட்டதோடு ஒருவருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
“இவை உண்மையான வீடியோவா என்பதை விட அச்சுறுத்தல் உண்மையானது” என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
