பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்கல் போட்டியில் இலங்கையின் இந்திக்க திசநாயக்க இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுகொடுத்தார்.
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கொஸ்டில் நடைபெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டு போட்டியின் இரண்டாவது நாளான நேற்று ஆண்களுக்காக 69 கிலோகிராம் எடைப்பிரிவில் பளுதூக்கல் போட்டி நடைபெற்றது.
இதில் இந்திக்க மொத்தம் 297 கிலோகிராம் எடையை தூக்கி இலங்கைக்கு முதல் வெள்ளிப்பதக்கத்தை வென்று கொடுத்தார். ஸ்னட்ச் பிரிவில் 137 கிலோகிராம் எடையை தூக்கி முன்னிலை பெற்ற அவர் ‘கீளீ அன்ட் ஜெர்க்’ பிரிவில் முதல் முயற்சியிலேயே 160 கிலோகிராம் எடையை தூக்கினார்.
வேல்ஸை சேர்ந்த கரெத் இவான்ஸ் ஸ்னட்ச் பிரிவில் 136 கிலோகிராம் எடையை தூக்கி இந்திக்கவுக்கு பின்தங்கி இருந்தபோதும் ‘கீளீ அன்ட் ஜெர்க்’ பிரிவில் தனது இரண்டாவது முயற்சியில் 163 கிலோகிராம் எடையை தூக்கி முன்னிலை பெற்றார். இதன்மூலம் மொத்தம் 299 எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தியாவின் தீபக் லாதர் மொத்தம் 295 கிலோகிராம் எடையை தூக்கி வெண்கலம் வென்றார்.
பொதுநலவாய போட்டியின் முதல் நாளான நேற்று முன்தினம் பளுதூக்கலில் பெண்களுக்கான 48 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட தினுௗஷா கோமஸ் மற்றும் ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீரர் சதுரங்க லக்மால் ஜயசூரிய இலங்கைக்கு வெண்கலப் பதக்கங்களை வென்று கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது.
