Thursday, June 20, 2019

“ஊடகங்கள் எம்மை கொன்று விட்டன” ; டொக்டர் ஷாபியின் மனைவி

குருனாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுகள், அவரது குடும்பத்தினர் அனுபவித்த வேதனைகள் பற்றியெல்லாம் மனம் திறக்கிறார் மனைவியான டொக்டர் இமாரா ஷாபி

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரகவியல் வைத்தியராக இருப்பவர் டொக்டர் இமாரா ஷாபி. 2019 மே 23 ஆம் திகதி வியாழக்கிழமை எந்த நாளும் போலத்தான் அன்றும் விடிந்தது. அவரும் அவரது டாக்டர் கணவரும் அன்றும் வழக்கம் போல் விடியற்காலையிலேயே எழுந்து விட்டனர். அன்று செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் பிள்ளைகளைப் பற்றி பேசினார்கள். அவரது கணவர் டொக்டர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி எப்போதும் போல அன்றும் காலை 5 மணிக்கு அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்று விட்டார். ஒரே துறையில் இருந்த இந்த தம்பதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் படித்த போதே முன்முதலில் ஒருவரையொருவர் சந்திருந்தனர்.

அன்றைய தினம் வெளியான ஒரு சிங்களப் பத்திரிகை வெளியிட்டிருந்த தலைப்புச் செய்தியே அவர்களது வாழ்க்கையை பெருமளவில் மாற்றியமைத்தது.

தௌபீக் ஜமாத் அமைப்பை சேர்ந்த டொக்டர் ஒருவரை குருணாகல் வைத்தியசாலையில் வைத்து 4 ஆயிரம் சிங்களத் தாய்மாரை மலடாக்கியுள்ளார் என்ற செய்திதான் டொக்டர் தம்பதியினரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.

அன்று பிற்பகலில் மேற்படி செய்திக்கு டொக்டர் ஷாபியின் பெயரை மேற்கோள் காட்டி ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் மேற்படி செய்தியை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். குருணாகல் போதனா வைத்தியசாலையில் அப்போது சிரேஷ்ட வைத்திய அதிகாரியாக இருந்தவர் டொக்டர் ஷாபி என்பதாலேயே அவரது பெயர் இங்கு பயன்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அதே தினத்தன்று பொலிஸ் பேச்சாளர் மேற்படி பத்திரிகை செய்தியை நிராகரித்திருந்தார். அதுபோன்ற ஒரு முறைப்பாடு தமக்கு கிடைத்திருக்கவில்லை என்றார் அவர்.

எனினும் அடுத்த நாளன்று டொக்டர் ஷாபி கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். செய்திப் பத்திரிகைகளில் கூறியிருந்த செய்திக்காக அவர் கைது செய்யப்படவில்லை. சட்டவிரோதமாக பெருமளவு சொத்து சேர்த்தார் என்ற ரீதியிலேயே அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர். எவ்வாறெனினும் தேசிய தௌபீக் ஜமாத்துடன் டொக்டர் ஷாபிக்கு உள்ள தொடர்பு பற்றியோ, வெளியிடப்படாத அளவுக்கு அவர் சொத்து சேர்த்தார் என்பது பற்றியோ அல்லது அவர் தாய்மாரை மலடாக்கினார் என்பது பற்றியோ அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

ெடாக்டர் ஷாபி தடுப்புப் காவலில் இருந்த நிலையில் அவரது மனைவி டொக்டர் இமாரா ஷாபியினால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அவர்களது பிள்ளைகளான மூவரும் பாடசாலைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 10, 13 மற்றும் 15 வயதுடையவர்கள்.

“எமது வீடுகளில் இருந்து நாம் அகதிகளைப் போல் வெளியே நிற்க வேண்டியுள்ளது. ஏனெனில் எமது வீடு இனிமேல் எமக்கு பாதுகாப்பாக இல்லை” என்று டொக்டர் ஷாபி கூறினார். அத்துடன் அவரது போராட்டம், தனது கணவரை விடுவிக்க அவர் செய்த முயற்சிகள், ஆகியவை பற்றி எம்முடன் விளக்கமாகப் பேசினார்.

ெடாக்டர் ஷாபி கைதாகியது மட்டுமன்றி அவரது மருந்துக்கூடமும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதேநேரம் ஷாபியின் அரசியல் தொடர்புகள் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. 2015 இன் நடுப்பகுதியில் டொக்டர் ஷாபி அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்தார். அதனை யடுத்து அரசியலில் ஈடுபட்ட அவர் ஐ. தே. க சார்பாக ரிசாட் பதியுதீனுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.

அவருக்கு சுமார் 54 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. கட்சிப் பட்டியலில் அவர் 8 ஆவது இடத்தைப் பெற்றார். ஆனால் அதில் இருந்த ஏழு பேர் மட்டுமே பாராளுமன்றம் செல்ல முடிந்தது. அதன் பின் அவர் அரசியலில் இருந்து விலகினார். வைத்தியசாலையில் பணிபுரியத் தொடங்கினார். பத்திரிகையொன்றுக்கு முன்னர் அளித்த பேட்டியொன்றில் தான் இனவாதம் மற்றும் தீவிரவாத அரசியலை எதிர்ப்பவர் என்பதுடன், தான் 8 ஆயிரம் சிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளை செய்துள்ளதாக கூறியிருந்தார். அதுவே அவருக்கு எதிராக மாறியது. அவர் செய்த 8 ஆயிரம் சிசேரியன் சத்திரசிகிச்சைகளில் 4 ஆயிரம் பேரை மலடாக்கும் வகையில் அவர் செயற்பட்டதாக அவர் மீது குற்றம சுமத்தப்பட்டது.

அதிக அளவில் சொத்து சேர்த்தமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் மேற்படி மலடாக்கிய சத்திர சிகிச்சை தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே காட்டுத்தீ போல பரவின.

ஊடகங்கள் நிலையை மேலும் மோசமாக்கி விட்டன. அதேநேரம் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. உடனடியாக ஷாபியின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர். ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய தாய்மார்கள் வரவழைக்கப்பட்டனர்.

இவ்வாறான முறைப்பாடுகள் சுமார் ஆயிரத்தை எட்டின. குருணாகல் போதனா வைத்தியசாலை, கலேவல மாவட்ட வைத்தியசாலை, தம்புள்ள தள வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் ஷாபி வேலை செய்திருந்தார். அந்த வைத்தியசாலைகளில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. மேற்படி பதிவுகளை மேற்கொண்ட அதிகாரியொருவர் இது பற்றிக் கூறும்போது பெரும்பாலான முறைப்பாடுகள் ஐயப்பாடான தன்மையுடன் இருந்ததாகவும் தாய்மாரில் பலர் முதுவலி மற்றும் அடி வயிற்றில் வலி ஆகியவை பற்றியே தமது முறைப்பாடுகளில் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறுகிறார்.

குற்றம் சாட்டப்பட்டவாறு டொக்டர் ஷாபி மேற்படி கருத்தடை செய்யும் முறையில் ஈடுபட்டாரா இல்லையா என்பது மேற்படி தாய்மாரை விஞ்ஞானபூர்வ ஆய்வுக்குட்படுத்தினால் தெரிந்துவிடும். ஆனால் மேற்படி தாய்மார் மற்றும் அவர்களது கணவர்மாரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று கூறப்பட்டதையடுத்து மேற்படி தாய்மார் இருவரும் தொடர்ந்து முறைப்பாடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை

மேற்படி தாய்மாரிடம் எக்ஸ்ரே சோதனையுடன் கருக்குழாய் அடைப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய 'டை' ஒன்றை பாவித்து நடக்கும் சோதனையும் இடம்பெறும் என்றும் இந்த சோதனைகள் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டதை அடுத்து இவர்களின் ஆர்வம் குறைந்ததாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் அரச மருத்துவ சங்கத்தின் செயலாளரான டாக்டர் இந்திய ரத்னாயக்க கூறுகிறார்.

டாக்டர் இமாரா தற்போது தனது கணவரைப் பற்றிய குற்றச்சாட்டு தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். "கணவர் வெறுமனே விடுதலை செய்யப்படுவதை தான் விரும்பவில்லை. அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் விசாரணையே எனக்கு வேண்டும்” என்று டாக்டர் இமாரா கூறுகிறார்.

பல்கலைக்கழகத்துக்கு சென்று டொக்டராவது எளிதான விஷயமல்ல. நாங்கள் இருவரும் புலமைப் பரிசில் பெற்றதன் மூலமே பல்கலைக்கழகம் சென்றோம். எமது நாட்டுக்கு நான் சேவையாற்ற விரும்புகிறேன் என்று இமாரா ஆதங்கப்படுகிறார்.

ஷாபி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினராக இருந்த போதும் அந்த தொழிற்சங்கத்தின் மூலம் அவருக்கு குறைந்த அளவிலான உதவியே கிடைத்தது.

பிரசவம் இடம்பெறும்போது அதனை கையாள ஒரு மருத்துவ அணியே ஈடுபடும். இதில் சிரேஷ்ட வைத்திய அதிகாரி, அவரது உதவியாளர் வெளியில் இருந்து வருகை தரும் தாய்மை மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர், உபகரணங்களை கொடுக்கும் தாதி, ஓடியாடி செயற்படும் தாதி, மயக்க மருந்தை வழங்கும் டொக்டர் அல்லது ஆலோசகர் மற்றும் சிற்றூழியர் என குறைந்தபட்சம் 7 பேராவது ஒரு மருத்துவ அணியில் இடம்பெறுவர்.

இவ்வாறு ஒரு மருத்துவ அணி செயற்பாட்டில் இருக்கும்போது ஷாபிக்கு தாய்மாரை மலடாக்கும் என்ற செயற்பாட்டையும் அணியின் மற்றைய உறப்பினர்களுக்கு தெரியாமல் செய்ய முடியாது என்பதே கருத்தாக உள்ளது.

குறிப்பிட்ட தாய்மார் மலடாக்கப்பட்டனரா என்பதை நிரூபிக்க மிகவும் விரிவான சோதனைகள் தேவைப்படுகின்றன. எனவே பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தாய்மார்களில் சிலரை மட்டுமே நாம் சோதனைக்குட்படுத்த முடியும். அத்துடன் குறிப்பிட்ட தாய்மாரின் கணவர்மாரையும் சோதனைக்குட்படுத்த வேணடியுள்ளது. அது மட்டுமன்ற கருக்குழாய் அடைபடுவது ஏனைய மருத்துவ காரணங்களாலும் இடம்பெறலாம். எனினும் ஷாபி விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் தவறானவை என்று முன்னணி மகப்பேற்று மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

இந்நிலையில் ஷாபி திடீரென கைது செய்யப்பட்டமை தொடர்பாக அடிப்படை உரிமை மனுவொன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. டொக்டர் ஷாபி மீது பொய்யாக குற்றம சுமத்திய அனைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று ஷாபியின் சார்பான சட்டத்தரணி கூறுகிறார். இதில் குருணாகல் மேயரும் அடங்குகிறார். ஷாபி கருக்கலைப்பில் ஈடுபட்டார் என்று குருணாகலை மேயர் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.

ஷாபி மீதான கருக்கலைப்பு செய்தியை முதல்முதலாக முதல்பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்ட பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் மேற்படி செய்தி பொலிஸ் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்களை மையப்படுத்தியே வெளியிடப்பட்டதாக கூறியிருக்கிறார்.

எது எவ்வாறெனினும் ஷாபியின் மனைவி டொக்டர் இமாராவின் பிரச்சினைகள் இன்னும் முடிந்தபாடில்லை."எனக்கு இப்போதும் சரியாகத் தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை. இது எமது பிள்ளைகளையும் பெரிதாகப் பாதிக்கிறது.எனது குடும்பத்தின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. நிலைமை சாதாரணத்துக்கு திரும்பி முன்னரைப் போல இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனது கணவர் அப்பாவி என்று வெளியில் வந்தாலும் நிலைமை முன்னரைப் போல் இருக்கும் என்று கூற முடியாது. ஏனெனில் ஊடகங்கள் எம்மை கொன்று விட்டன” என்று கூறுகிறார் இமாரா ஷாபி.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured