Thursday, September 7, 2023

புனித குர்ஆன் மனனப்போட்டி வெற்றியாளர்களுக்கு இலட்சங்களைப் பரிசளித்த சவூதி


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்) 

அல்-குர்ஆன் மனனஞ்செய்வதற்கும் ஓதுவதற்கும், விளக்குவதற்குமான மன்னர் அப்துல் அசீஸ் 43வது சர்வதேச புனித குர்ஆன் மனனப்போட்டியில் வெற்றி பெற்றவர்களைப்பாராட்டும் இறுதி நிகழ்வு நேற்று (06) புதன்கிழமை இரவு மக்கா ஹரம் ஷரீபில் நடைபெற்றது.

இஸ்லாமிய விவகார, அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சர் கலாநிதி ஷேக் அப்துல் லதீஃப் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஷேக் அவர்களின் நெறியாள்கையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரண்டு புனிதஸ்தளங்களின் சேவகரான மன்னர் ஸல்மானுக்குப் பதிலாக மக்காவின் பிரதி கவர்னர் இளவரசர் பத்ர் பின் ஸுல்தான் பின் அப்துல் அஸீஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களைக் கௌரவித்தார். 

ஹிஜ்ரி 1445, சஃபர், 9-21 காலப்பகுதியில் புனித ஹரமில் நடைபெற்ற 43வது அமர்வில் 117 நாடுகளிலுருந்து 166 போட்டியாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. 

அப்போட்டியாளர்கள் ஐந்து பிரிவுகளில் போட்டியிட்டனர். மொத்த பரிசாக 4,000,000 றியால்கள் வழங்கி வைக்கப்பட்டன.

முதல் பிரிவில் முதலிடத்தை சவூதி அரேபியாவின் அய்யூப் பின் அப்துல் அஸீஸ் அல்-வஹீபிக்கு 500,000, இரண்டாமிடம் பெற்ற அல்ஜீரியாவைச்சேர்ந்த சஃத் பின் சஃதீ சலீமுக்கு 450,000, மூன்றாமிடம் பெற்ற சாட் நாட்டைச்சேர்ந்த அபுல் ஹசன் ஹசனுக்கு 400,000 றியால்களும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

இரண்டாவது பிரிவில் சவூதி அரேபியாவைச்சேர்ந்த அம்மார் பின் சாலிம் அல்-ஷஹ்ரி முதலிடத்தைப் பெற்று 300,000, இரண்டாமிடத்தைப் பெற்ற பஹ்ரைனைச் சேர்ந்த முஹம்மது பின் அத்னான் அல்-உமரிக்கு 275,000, மூன்றாமிடத்தைப் பெற்ற சிரியாவைச்சேர்ந்த அப்துல் அஸீஸ் பின் மாலிக் அத்லிக்கு 250,000 றியால்களும் பரிசாக வழங்கப்பட்டன.

மூன்றாவது பிரிவில் முதலிடம் பெற்ற சோமாலியாவைச் சேர்ந்த முஹம்மது பின் இப்ராஹிம் முஹம்மதுக்கு 200,000, இரண்டாமிடம் பெற்ற ஸ்வீடனைச்சேர்ந்த ஷுஐப் பின் முஹம்மது ஹசனுக்கு 190,000, மூன்றாமிடம் பெற்ற பங்களாதேஷைச்சேர்ந்த பைசல் அகமதுக்கு 180,000 நான்காமிடம் பெற்ற இந்தோனேசியாவைச்சேர்ந்த முஹம்மது முஃபித் அல்-இஸ்ஸாவுக்கு 170,000, ஐந்தாமிடத்தைச் சேர்ந்த லிபியாவைச்சேர்ந்த சிராஜுத் தீன் முஅம்மர் அல்-கிண்தி 160,000 றியால்களும் பரிசாக வென்றனர்.

நான்காவது பிரிவில் செனகலைச்சேர்ந்த முஹம்மது காய் முதலிடத்தைப்பெற்று 150,000, இரண்டாமிடத்தை லிபியாவைச்சேர்ந்த ஹாதிம் அப்துல் ஹமீத் ஃபலாஹ்வுக்கு 140,000, மூன்றாமிடம் பெற்ற உகாண்டாவைச்சேர்ந்த யாசின் அப்துல் ரஹ்மானுக்கு 130,000, நான்காமிடம் பெற்ற வங்கதேசத்தைச் சேர்ந்த முஷ்பிகுர் ரஹ்மான் வென்று அவர் 130,000 ரியால்களையும், ஐந்தாவது இடத்தை சோமாலியாவைச் சேர்ந்த அப்துல் காதிர் யூஸுப் முஹம்மத் பெற்று 110,000 ரியால்களையும் தட்டிச்சென்றனர்.

ஐந்தாவது பிரிவில் முதலிடம் பெற்ற ரீயூனியன் நாட்டைச்சேர்ந்த இலியாஸ் அப்துக்கு 65,000, இரண்டாமிட பெற்ற இந்தியாவைச்சேர்ந்த இப்ராஹிம் ஷாபண்தரிக்கு 60,000, மூன்றாமிடம் பெற்ற நெதர்லாந்தைச்சேர்ந்த மர்வான் பின் ஷலாலுக்கு 55,000, நான்காமிடம் பெற்ற போஸ்னியா ஹெர்சகோவினாவைச்சேர்ந்த முஸ்தபா ஸ்னானோவிஸுக்கு 50,000, ஐந்தாமிடம் பெற்ற வடக்கு மாசிடோனியாவைச்சேர்ந்த ஹாசிப் அம்ருல்லாவுக்கு 45,000 றியால்களும் பரிசாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சர் ஷேக் கலாநிதி அப்துல் லத்தீஃப் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஷேக் பரிசு பெற்ற போட்டியாளர்களின் அளவையும், அவர்களின் இதயங்களில் புனித அல்-குர்ஆனை மனப்பாடம் செய்யும் திறனையும் பாராட்டிய அதே நேரம், அழகிய பாராயணம் செய்தல், அதை ஒப்புவித்தல் மற்றும் அதன் விளக்கம் ஆகியவற்றில் அவர்களின் தனிச்சிறப்பு, அவர்கள் அடைந்த மாபெரும் சாதனையைக்குறிப்பிட்டு, வெற்றியாளர்களுக்கும் அவர்களுடன் வந்தவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அதேபோல், அல்-குர்ஆனின்படி வாழப்பரிந்துரை செய்து இச்சர்வதேச அல்-குர்ஆன் போட்டிக்கு நிதியுதவி செய்யும் இரண்டு புனித இஸ்தலங்களின் பாதுகாவலரான மன்னருக்கும் முடிக்குரிய இளவரசருக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.

கலாநிதி அஷ்ஷெய்க் எம்.பி.எம்.இஸ்மாயீல் மதனி

http://www.max24news.com
2023.09.07
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured