மஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாட்டின் சில் பகுதிகளில், கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருவதாக எரிக்கப்படும் குற்றச்சாட்டை அடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கருத்துத் தெரிவித்த பொலிஸ் மாஅதிபர், மஹரகம கடை எரிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளிலும் இன முறுகலையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற இவ்வாறான தனிநபர்கள் மற்றும் குழுவினர் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என அவர் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, இனவாத கருத்துகளை வெளியிட்டு வரும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர், ஞானசார தேரர், இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாமை தொடர்பில், நீதிமன்றத்தினால் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள ஞானசாரவை தேடும் பணியில், 4 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.